
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தனித்து நிற்கும் தனி தமிழ் தேசியம் படைப்போம் என்பது தற்போது இருக்கும் தமிழகத்தில் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது என்றுதான் கூற வேண்டும். விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரனே ஏற்றுக்கொண்ட பெரியாரை எதிர்ப்பாக நிறுத்தி தற்போது அரசியல் செய்து கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய கட்சியுடன் நம்முடைய கோரிக்கைகளை முன்வைத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழியில் தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சியை செயல்பட்டு கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சி இடம் 10 கோரிக்கைகளை முன் வைத்தால் அதில் வெறும் மூன்று கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு மீதமுள்ள ஏழு கோரிக்கைகளை நிலுவையில் போட்டு விடுகின்றனர். அதற்கும் போராட்டங்கள் மூலமாகவும் அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சமூக நீதி என்று மேடைக்கு மேடை பேசிக்கொண்டிருக்கும் முதல்வர் சமூக நீதியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்றால் அனைத்து மக்களுக்கும் சம நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கு ஒரே ஒரு தீர்வு ஜாதி வாரி கணக்கெடுப்பு மட்டும்தான் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.