உத்தரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில், உணவின் வாசனை காரணமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பா பூர்வா பகுதியில் வசித்து வந்த ராம் அவதார் என்ற 65 வயது முதியவர், தனது வீட்டு குழந்தைகளுக்காக மேகி மற்றும் பாஸ்தா தயாரிக்கப்படுவதை எதிர்த்தார். கடந்த வியாழக்கிழமை இரவு குழந்தைகளுக்காக மேகி தயாரிக்கப்படுவதைக் கண்ட அவர், மனமுடைந்த நிலையில் தனது அறைக்குச் சென்று தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டார்.

ராம் அவதார், ஆயுதத் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி காலமாகிவிட்ட நிலையில், அவர் தனது இரு மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் உடன் வாழ்ந்து வந்தார். குடும்பத்தில் தனது பேச்சு மதிக்கப்படவில்லை என மனமுடைந்த அவர், தற்கொலைக்கு முயன்றதாக அவரது தம்பி தெரிவித்துள்ளார். மேகியின் வாசனை பிடிக்காததால் அவர் சமையலறையில் தயாரிக்க வேண்டாம் என்று பலமுறை கேட்டும், அதை குடும்பத்தினர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ராம் அவதார் பயன்படுத்திய துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பதையும் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.