டெல்லி மெட்ரோ ரயில் நிலைய லிஃப்ட்டிற்குள் முதியவர் ஒருவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக பெண் தொழில்முனைவோர் ஒருவர் அவரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட முதியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

தீப்ஷிகா மேத்தா என்ற பெண் தொழில்முனைவோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். டெல்லி மெட்ரோ ரயில் நிலைய லிஃப்ட்டிற்குள் அவரும், அந்த முதியவரும், வேறு இரு பயணிகளும் சென்றுள்ளனர். அப்போது, அந்த முதியவர் லிஃப்ட்டிற்குள் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீப்ஷிகா, முதியவரை நோக்கி, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த முதியவர் எவ்வித பதற்றமும் இன்றி, “ஆமாம், சாரி… நீ என்ன செய்யணுமோ செஞ்சுக்கோ” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, பொது இடங்களின் தூய்மை குறித்த விவாதத்தைக் கிளப்பியது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை அதன் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. காவல்துறை அறிக்கையின்படி, இச்சம்பவம் மே 15, 2026 அன்று இரவு 9:40 மணியளவில் நடந்துள்ளது. ஜாமியா மெட்ரோ நிலையத்திலிருந்து ஃபரிதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த முதியவருக்கு, கல்காஜி மெட்ரோ நிலையத்தில் ரயில் மாறும்போது திடீரென கடுமையான மருத்துவ அவசர நிலை  ஏற்பட்டுள்ளது. அவர் கழிவறையைத் தேடியும் கிடைக்காததால், நிலைமை கட்டுப்பாட்டை மீறியுள்ளது. இதனால், அவர் லிஃப்ட்டிற்குள் ஒரு பாட்டிலில் சிறுநீர் கழிக்க முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்த மற்ற பயணிகள் மெட்ரோ ஊழியர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அந்த முதியவருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Deepshika Mehta (@curly_myth)

இந்தச் சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஒரு தரப்பினர், “மெட்ரோ நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து இவரைப் போன்றவர்கள் பயணம் செய்யத் தடை விதிக்க வேண்டும்; பொது ஒழுக்கம் இல்லாத செயல்” என்று பெண்ணிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம், “வயதான காலத்தில் இதுபோன்ற மருத்துவ அவசர நிலைகள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சக மனிதர்களிடம் கொஞ்சம் மனிதாபிமானம் காட்ட வேண்டும். அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடுவது முறையல்ல” என்று முதியவரின் நிலைக்கு ஆதரவாகவும் பலர் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.