நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாகை மாவட்டத்தில் 172 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் தினம் தோறும் 4,500 முதல் 5000 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 74 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 54 ஆயிரத்து 250 டன் அரவைக்கும், குடோன்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19,793 டன் கொள்முதல் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அந்த நெல் மூட்டைகளையும் குடோன்களுக்கு அனுப்ப துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த 14-ஆம் தேதி வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.150 கோடிக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனால் நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளுக்கு எந்தவித கால தாமதமும் இல்லாமல் நெல் கொள்முதல் செய்வது மட்டுமல்லாமல் பணத்தையும் அவ்வபோது வழங்கி வருகிறது.

இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெறுவது குறித்து வந்த புகாரின் பேரில் ஆயக்காரன்புலத்தில் ஒருவரும், திருப்பயந்தான் குடியில் இரண்டு பேரும் என கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வந்த மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் கொள்முதல் நிலையங்களை விஜிலென்ஸ் பிரிவும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதனால் விவசாயிகள் எந்தவித பணமும் வழங்காமல் கொள்முதல் நிலையங்களில் தங்கள் அறுவடை நெல்லை விற்று பயன் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.