
சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெருவை சேர்ந்த மீன்பாடி வண்டி ஓட்டி வரும் ராஜ்குமார் என்பவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு கடந்த ஜூலை 1ஆம் தேதி ராயபுரத்தில் உள்ள ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஐந்து நாட்களுக்குப் பிறகு குழந்தையுடன் வீடு திரும்பிய நிலையில் ஜூலை ஏழாம் தேதி பச்சிளம் குழந்தையின் வயிற்றில் ரத்த காயத்துடன் குடல் சரிந்த நிலையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தையின் வயிற்றில் மூன்று இடங்களில் ஆயுதத்தால் குத்திய இரத்தக்காயமும் இருந்ததால் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கூர்மையான ஆயுதத்தால் பச்சிளம் குழந்தையின் வயிற்றில் மூன்று இடங்களில் குத்தியதால் குழந்தை உயிரிழந்ததாக தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரித்த போது ராஜ்குமார், ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால் மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.