நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு பயம் இருப்பது இயற்கைதான். ஆனால், எந்தவித நியாயமான காரணமும் இன்றி, ஒரு குறிப்பிட்ட பொருள், சூழ்நிலை அல்லது உயிரினத்தைக் கண்டு அளவுக்கு அதிகமாகப் பயப்படுவதும், அதைக் நினைத்து பதற்றமடைவதும் ‘போபியா’ என்று அழைக்கப்படும் உளவியல் சார்ந்த பாதிப்பாகும்.
மேலும் உயரமான இடங்கள், மூடிய அறைகள், பூச்சிகள், நீர்நிலைகள் அல்லது சமூகத்தில் நாலு பேரிடம் பேசுவது எனப் பல்வேறு விஷயங்கள் மனிதர்களுக்குப் போபியாவை ஏற்படுத்தக்கூடும். சாதாரண பயம் என்பது ஆபத்து நேரங்களில் நம்மை எச்சரிக்கும்; ஆனால் போபியா என்பது எந்த ஆபத்தும் இல்லாத சூழலிலும் மனதை அச்சுறுத்தி, அன்றாட வாழ்க்கையையே முடக்கிவிடும் ஆற்றல் கொண்டது.
போபியா பாதிப்பு உள்ளவர்களுக்குத் திடீரென இதயத் துடிப்பு அதிகரித்தல், அதிகளவில் வேர்த்தல், மூச்சுத் திணறல், கை கால்கள் நடுங்குதல் மற்றும் கட்டுப்படுத்த முடியாத பய உணர்வு போன்றவை ஏற்படும். இதற்குப் பரம்பரை காரணங்கள், மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் அல்லது சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் அதிர்ச்சிகள் காரணங்களாக அமையலாம்.
பலர் இந்த பயத்தை வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்பட்டுத் தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், சரியான நேரத்தில் இதை உணர்ந்து உளவியல் ரீதியான தீர்வுகளைத் தேடுவதன் மூலம் போபியாவிலிருந்து மிக எளிதாக முழுமையாக மீண்டு வர முடியும்.
போபியாவைப் போக்குவதற்கு மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் ‘நடத்தை சிகிச்சை’ மற்றும் ‘எக்ஸ்போஷர் தெரபி’ போன்ற முறைகளைப் பயன்படுத்திச் சிகிச்சையளிக்கின்றனர். இதில், பயத்தை தூண்டும் விஷயங்களைச் சிறுகச் சிறுக பாதுகாப்பான முறையில் எதிர்கொள்ள நோயாளிக்குக் கற்றுத்தரப்படுகிறது.
இதுதவிர, தினசரி தியானம், மூச்சுப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மனதை அமைதிப்படுத்திப் பதற்றத்தைக் குறைக்க பெரிதும் உதவும். காரணமற்ற பயத்திற்கு அடிமையாகாமல், சரியான மருத்துவ ஆலோசனையைப் பெற்றால் போபியாவை வென்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்.
