மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டின் போது இந்து முன்னணி சார்பில் அண்ணா மற்றும் பெரியார் குறித்து கடவுள் மறுப்பு நம்பிக்கையை வைத்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

அந்த மாநாட்டில் அரசியல் இருக்காது முருகனின் பக்தி மட்டும் தான் இருக்கும் என்று கூறியதால் அதிமுக தலைவர்கள் சென்றார்கள் என்று அதிமுக சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். இப்படி செய்தது தவறு என்று அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் அந்த சர்ச்சை வீடியோ குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் கூறியதாவது, இந்து முன்னணி மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணா குறித்த அந்த வீடியோ தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்து முன்னணியின் செயலை அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். எங்களின் வழிகாட்டியாக இருக்கும் அண்ணா மற்றும் பெரியாரை இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. மேலும் முருக பக்தர்கள் மாநாடு என்று அழைத்துவிட்டு விரும்பத்தகாத  காட்சிகளை ஒளிபரப்பியிருக்கக் கூடாது என்று கூறினார்.