அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ரினிகி புயன் சர்மா இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பதாகவும், துபாயில் அவருக்குச் சொத்துக்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா மற்றும் கௌரவ் கோகோய் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இந்திய சட்டப்படி இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதியில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ், முதல்வர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வெளிநாட்டுச் சொத்து விவரங்களை மறைத்துவிட்டதாகவும், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ள முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் வெளியிட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று விளக்கம் அளித்துள்ளார். இவை செயற்கை நுண்ணறிவு மற்றும் போட்டோஷாப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும், பாகிஸ்தானைச் சேர்ந்த வாட்ஸ்அப் கணக்குகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு காங்கிரஸ் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

இந்நிலையில் துபாய் கோல்டன் விசா மற்றும் எகிப்திய பாஸ்போர்ட் தொடர்பான புகார்கள் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்ட அவர், தேர்தலை முன்னிட்டு பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயலும் காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பவன் கேரா மீது ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.