மதுரை மேலூர் டங்ஸ்டண்ட் கனிமவளம் ஒப்பந்தம் குறித்து அதிமுக தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார். மதுரை கனிம வளம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிமுக அரசு துரோகம் செய்ததாக வெளியிடப்பட்ட வீடியோ குறித்து தம்பிதுரை கூறியதாவது, கனிமவள ஒப்பந்தம் குறித்து தமிழக முதலமைச்சர் என்னைப் பற்றி ஒரு தவறான செய்தியை கூறுவது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. மதுரையில் மேலூர் டங்ஸ்டன் கனிம வளத்தை ஏலம் இடுவதற்கு ஆதரவாக ஏற்கனவே நான் நாடாளுமன்றத்தில் பேசி உள்ளதாக முற்றிலும் தவறான தகவலை கூறி வருகின்றனர்.

முன்னதாக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு கனிம வளங்களை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்த்து கொடுப்பது கண்டித்தும் கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த ஏல முறையான சட்டத்தை குறித்து நான் பேசியது, தனியாருக்கு நேரடியாக கனிம வளங்களைப் பெற உரிமம் வழங்கக்கூடாது. ஏல முறையில் மட்டுமே வழங்கினால் இது மாதிரியான ஊழலை தடுக்க முடியும் எனவே இதை வரவேற்கிறேன் என பொதுவாக கூறினேன்.

ஆனால் குறிப்பாக மதுரையில் மேலூர் பகுதியில் டங்ஸ்டன்ட் சுரங்கத்தை அமைப்பதற்கு உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எக்காரணம் கொண்டும் எந்த இடத்திலும் நான் கூறியது இல்லை. இது மாதிரியான தவறான தகவலை முதலமைச்சர் கூறுவது கண்டிக்கத்தக்கதாகும். தவறான தகவல் அளித்ததற்கு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை எனில் அதிமுக சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.