நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மண்ணில் நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இந்திய அணி இழப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்றுத் தோல்வியைத் தொடர்ந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடரை இழந்த இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதலாவது போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற சமநிலையை எட்டியது.

தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்திய மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்து இந்தியா தலைகுனிவைச் சந்தித்துள்ளது.

தோல்விக்குப் பிறகு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் மைதானத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த ரசிகர்கள் சிலர் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக கம்பீர் ஒழிக என ஆவேசமாக முழக்கமிட்டனர்.இந்தச் சம்பவத்தின் போது கம்பீருக்கு அருகில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.

ரசிகர்களின் இந்தத் திடீர் செயலால் வீரர்கள் அனைவரும் திகைத்துப் போயினர். குறிப்பாக, விராட் கோலி ரசிகர்களின் இந்தச் செயலால் தனது வியப்பை வெளிப்படுத்தினார். இருப்பினும், கௌதம் கம்பீர் இந்த முழக்கங்களைக் கண்டும் காணாதது போல் அமைதியாக இருந்தார். மேலும்
தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு கம்பீருக்கு இது ஒரு கசப்பான அனுபவமாக மாறியுள்ளது.