அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், “கட்சியிலிருந்து தன்னை நீக்கினால் மகிழ்ச்சி” என்று இன்று (அக். 30) பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வின்போது, அவர் அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடனான சந்திப்பு குறித்துப் பேசிய அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்), செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எவ்விதத் தயக்கமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்த நிலையில், செங்கோட்டையனின் இந்த எதிர்வினை வந்துள்ளது. தனது அரசியல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, விரைவில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அறிவிப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசல்கள் வலுவடைந்துள்ள நிலையில், செங்கோட்டையனின் இந்த வெளிப்படையான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.