அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர் உசேனுக்கு வேலை கிடைத்தது. அந்த மில் வளாகத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

அவருடன் ஜாகிர் உசேனின் மனைவியும் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். வீட்டில் ஏழு வயது உடைய சிறுவன் கைரல் இஸ்லாம் மட்டும் இருந்தான். இதனை தொடர்ந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் முகம் மற்றும் கழுத்தில் காயங்களுடன் கைரல் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மகனை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் கைரல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பனியன் மூலம் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் யார் கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை. எனவே கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.