ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். கடந்த இரண்டு போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து விமர்சனத்திற்கு உள்ளான ராகுல், இந்தப் போட்டியில் 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார்.

மேலும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், ராகுல் 52 பந்துகளில் 92 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். மைதானத்தில் அமர்ந்து இந்தப் போட்டியை நேரில் கண்டுகளித்த கேஎல் ராகுலின் மனைவி அதியா ஷெட்டி, ராகுல் அரைசதம் அடித்தவுடன் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதனால் அரைசதம் கடந்த பிறகு ராகுல் தனது பாணியில் ஒரு சிறப்பான கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கேமராவின் பார்வை அதியா ஷெட்டியின் பக்கம் திரும்பியது. தனது கணவரின் சிறப்பான ஆட்டத்தைக் கண்டு அவர் நெகிழ்ச்சியுடன் புன்னகைத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.