நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நாட்டில் நிலவி வரும் எரிபொருள் மற்றும் கேஸ் நெருக்கடி காரணமாக, கொரோனா காலத்தைப் போல மீண்டும் லாக்டவுன் கொண்டு வரப்படலாம் எனச் சில வதந்திகள் பரவின.

இந்நிலையில், இது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ள நிதியமைச்சர், “இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படாது” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், எரிபொருளின் சீரான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

கச்சா எண்ணெய் விலை மாற்றங்களைச் சமாளிக்கவும், விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், லாக்டவுன் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.