தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தஞ்சைசாலை ஆனைவிழுந்தான் குளத்தெரு  சந்திப்பில் பல வருடங்களாக தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையின் சார்பாக பட்டுக்கோட்டை நகராட்சி மீன் அங்காடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீனவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்த அங்காடியில் சேது பாவசத்திரம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவப் பெண்கள் கடற்கரையில் இருந்து மீன்களை வாங்கி வேன்களிலும், இருசக்கர வாகனங்களிலும் அந்த அங்காடிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

தற்போது சில வருடங்களாக இந்த மீன் அங்காடி செயல்படவில்லை. இதனால் மீன் விற்பதற்காக கடப்பை கல், பலகை மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த கடப்பை கல்பலகைகளும் மீன் விற்பனைக்குரிய தளவாடங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் விற்பனை செய்யும் பெண்கள் இந்த அங்காடிக்கு வருவதை நிறுத்தி பட்டுக்கோட்டை நகரில் தெருவோரங்களில் ஆங்காங்கே இருக்கும் இடங்களில் மீன் விற்பனை செய்து வருகின்றனர். அதனால் மீன்வளத்துறை நகராட்சியும் இணைந்து இந்த அங்காடியை சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.