
சென்னையில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நேற்று இரவு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் அவரை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பித்தப்பை கல் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால் இன்று அதிகாலை விக்னேஷ் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் பணியில் இல்லாதது தான் விக்னேஷ் மரணத்திற்கு காரணம் எனக் கூறி உறவினர்கள் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் விக்னேஷுக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள விளக்கத்தில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர முடியாத காரணத்தினால் தீவிரமான நோய் பாதிப்புடன் அரசு மருத்துவமனைக்கு விக்னேஷ் கொண்டுவரப்பட்டார். அப்போது உள் நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இருந்தனர். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டதாக மருத்துவ தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.