ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாகப் பந்து வீசிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது, தனது பழைய சர்ச்சைக்குரிய விக்கெட் கொண்டாட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தியது கிரிக்கெட் உலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்திய வீரர் ஷுப்மான் கில்லை ஆட்டமிழக்கச் செய்துவிட்டு, தலையைக் காட்டி பெவிலியன் திரும்புமாறு அவர் செய்த சைகை பெரும் சர்ச்சையானது. அதன் பிறகு அந்த முறையை நிறுத்திவிட்டதாகக் கூறியிருந்த அவர், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் அதைப் பயன்படுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது இதைச் செய்வேன்; குறிப்பாக சில குறிப்பிட்ட அணிகளுக்கு எதிராகப் பந்து வீசும்போது கண்டிப்பாக இந்த கொண்டாட்டத்தைத் தொடர்வேன்” என்று இந்திய அணியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் ‘வெட்கமில்லாத’ பதிலைக் கொடுத்துள்ளார்.
Abrar Ahmed Silent Message to Team India.#PakvsAus #AbrarAhmed #India pic.twitter.com/0HolE1uF9H
— Anas Saeed (@anussaeed1) January 29, 2026
“>
பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் மோதவுள்ள நிலையில், அப்ரார் அகமதுவின் இந்தப் பேச்சு இந்திய ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவைப் பிசிபி தலைவர் திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், வீரர்களின் இத்தகைய ஆக்ரோஷமான கருத்துக்கள் களத்திற்கு வெளியேயும் அனலைக் கூட்டியுள்ளன.
இலங்கையில் தனது அனைத்துப் போட்டிகளையும் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி, இந்த விக்கெட் கொண்டாட்டத்தை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
