
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்த நிலையில் திருட்டு சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் கைது செய்த அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவருமான தாடி பாலாஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இரண்டு நாட்களாக என்னுடைய மனது அஜித்குமார் மரணத்தை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதே நல்லா இருக்கணும் என்பதற்காக தான். இவர்கள் காரை பார்க் செய்ய சொல்லியபோது அந்த தம்பி எனக்கு தெரியாது என்று சொல்லிய போதிலும் இவர்கள் சாவியை கொடுத்துள்ளார்கள். வேறு யாரையாவது வைத்து காரை பார்க் செய்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
கோவிலில் இருந்து வந்தவர்கள் வண்டியில் இருந்த நகையை காணவில்லை என புகார் கொடுத்த நிலையில் அவரை கைது செய்தனர். ஒருவர் தப்பு செய்தாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவரை அடிப்பதற்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது. ஏற்கனவே சாத்தான்குளத்தில் தந்தை மகனுக்கு நடந்துள்ளது பற்றி நான் பதிவு செய்துள்ளேன்.
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். கஞ்சி போட்டு சட்டையை அயர்ன் பண்ணா விரப்பா தான் இருப்பிங்களோ. அடிக்கும்போது அந்த வாலிபர் கத்துகிறார். ஒரு சக மனுஷனை அடிக்க எப்படி மனசு வந்தது. காக்கி சட்டை போட்ட எமனுங்களா. அறிவு வேண்டாமா.
மீதி இருக்கும் நாட்களில் ஆவது அரசாங்கம் இது போன்ற விஷயங்களை ஆதரிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வாலிபருக்கு நடந்த விஷயத்தை மனது மிகவும் சங்கடமாக இருக்கிறது. மேலும் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான். மனுஷங்களா இருங்க மிருகமா மாறிடாதீங்க என்று வீடியோவில் கூறியுள்ளார்.