சென்னையில் கல்லூரி மாணவியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபரை, அந்த மாணவியும் அவரது தோழிகளும் இணைந்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை தரமணியில் உள்ள தனியார் கல்லூரியில் இதழியல் பயின்று வருகிறார்.

மேலும் அவர் தனது தோழிகளுடன் உணவகம் சென்றுவிட்டு விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த ஒரு நபர் அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியும் அவரது தோழிகளும், அஞ்சாமல் அந்த நபரைப் பிடித்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அந்த நபர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதனால் போலீஸ் விசாரணையில், பிடிபட்டவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயதான காசி என்பதும், அவர் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆபத்தான சூழலில் பதற்றமடையாமல் தீரத்துடன் செயல்பட்டு அந்த நபரை மடக்கிய மாணவிகளின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.