இந்தியர்களின் சமயோசிதப் புத்திக்கும், கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து ஆபத்து காலத்தில் காரியம் சாதிக்கும் திறமைக்கும் என்றுமே பஞ்சமிருந்ததில்லை. அந்த வகையில், மதிய உணவுக்கு டிபன் பாக்ஸ் இல்லாததால், தான் புதிதாக வாங்கிய போன் பெட்டியையே சாப்பாட்டுப் பெட்டியாக மாற்றிய நபர் ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையவாசிகளைச் சிரிப்பலையில் மூழ்கடித்துள்ளது.

மேலும் அலுவலகத்திற்குச் செல்லும்போது உணவை எடுத்துச் செல்ல வேறு வழியில்லாமல், அந்த நபர் செய்த இந்தத் அசாத்திய காரியம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு செல்போன் பெட்டியை ஒருவர் மிகவும் கவனமாகத் திறக்கிறார். விலை உயர்ந்த புதிய போன் ஏதேனும் உள்ளே இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்களுக்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்தப் பெட்டிக்குள்ளே சூடான காய்கறி குழம்பு நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக போன் மற்றும் அதன் சார்ஜர் வைக்கும் இடத்தையே, தனக்கான மதிய உணவை எடுத்து வரும் டிபன் பாக்ஸாக அந்த நபர் மாற்றியிருப்பது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்த விசித்திரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் அள்ளிக் குவித்து வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தியர்களின் இந்தச் சமயோசித புத்திக்கு ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியே ஆச்சரியப்பட்டுப் போவார்” என்றும், “டிபன் பாக்ஸை மறந்தாலும் சாப்பாட்டை மறக்காத நல்ல மனுஷன்” என்றும் கலகலப்பாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் இந்தச் சம்பவம், பலரின் மன அழுத்தத்தைக் குறைத்து புன்னகையைத் தோற்றுவித்துள்ளது.

“>