தெலங்கானா மாநிலம் மிரியாலகுடா அருகே உள்ள சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில், வங்கியின் பாதுகாவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். மைசம்மாகுண்டா தடா பகுதியைச் சேர்ந்தவர் மேகாவத் மாங்தா (45). தனியார் வங்கி ஒன்றில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த இவர்தான் அந்த ஏழைக் குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரம். புதன்கிழமை அன்று மாங்தா தனது இருசக்கர வாகனத்தில் நந்திபாடு அருகே சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது குண்டூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக மாங்தாவின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மாங்தா மீது மோதியதோடு நிற்காமல், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு டிராக்டர் மீதும் அடுத்தடுத்து மோதி நின்றது. இந்த விபத்தில் குரியா தடாவைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் கார் சர்வீஸ் சென்டர் ஊழியரான சன்னி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
సీసీటీవీ ఫుటేజ్..!
నల్గొండ జిల్లా మిర్యాలగూడ బై పాస్లో ఘోర రోడ్డు ప్రమాదం
ఉన్నట్లుండి బైకర్ అడ్డు రావడంతో అదుపుతప్పి రెండు బైకులను, రోడ్డు పక్కన నిలబడ్డ మరో ఇద్దరిని బలంగా ఢీకొట్టిన కారు
ఒకరు స్పాట్ డెడ్.. మరో నలుగురికి తీవ్ర గాయాలు pic.twitter.com/v42Lxtss6W
— Telugu Scribe (@TeluguScribe) April 30, 2026
விபத்து நடந்தவுடன் காரில் இருந்தவர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடினர். இதற்கிடையே, தகவலறிந்து வந்த மாங்தாவின் குடும்பத்தினரும் கிராம மக்களும் ஆத்திரமடைந்து அத்தங்கி – நர்கெட்பள்ளி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். எங்கள் குடும்பத்தின் ஒரே தூணை இழந்துவிட்டோம்; நீதி வேண்டும் என்று கூறி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்ததால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போலீஸார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.
மாங்தாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டூ டவுன் இன்ஸ்பெக்டர் சோமநர்சய்யா தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கார் உரிமையாளரை வலைவீசித் தேடி வருகின்றனர். உயிரிழந்த மாங்தாவிற்கு மங்கம்மா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
