தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சுமார் 25 நிமிடங்கள் நேரில் சந்தித்து மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்துப் பேசியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் மாநிலத்தின் 69% இடஒதுக்கீட்டை முழுமையாகப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசே நேரடியாக இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே புள்ளிவிவரங்கள் துல்லியமாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இதுகுறித்த அறிவிப்பு வரவிருக்கும் கவர்னர் உரையில் இடம்பெற வேண்டும் என்றும், இதனைத் தமிழக அரசின்அதிகாரப்பூர்வ கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். சமூகத்தில் பின்தங்கிய மற்றும் இல்லாதவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதே உண்மையான சமூக நீதி என்று குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் பொதுச் சென்சஸ் உடன் சேர்த்தே இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் விஜய் தமக்கு உறுதியளித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

த.வெ.க ஆட்சியில் குறுகிய காலத்திலேயே ஊழல் மற்றும் லஞ்சம் பெரிய அளவில் குறைந்துள்ளதாகவும், நிறைய ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் வந்துள்ளதாகவும் அவர் வியந்து பேசியுள்ளார். இருப்பினும், “ஆட்சியாளர்கள் மாறியுள்ளார்கள்; ஆனால் அதிகாரிகள் தான் இன்னும் பழைய போக்கிலேயே இருக்கிறார்கள், அவர்கள் மாற வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசு அமைந்து அனைத்தையும் ஒரே மாதத்தில் மாற்றிவிட முடியாது என்பதால், த.வெ.க அரசுக்கு இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அன்புமணி ராமதாஸ், தற்பொழுது தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு முந்தைய தி.மு.க ஆட்சியே முழுமுதற் காரணம் என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.