மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றுள்ளது. அப்போது மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற போட்டியை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 4500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த தினேஷ்குமார் என்ற மாணவர் போட்டி முடிவடைந்த பிறகு சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் கழிவறைக்கு சென்ற தினேஷ்குமார் திடீரென மயங்கி விழுந்ததால் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் குமார் உயிரிழந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறியதாவது, தினேஷ் குமார் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு போட்டி முடிவடைந்த நிலையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற தினேஷ்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவருக்கு ரத்த அழுத்தமும், இதய துடிப்பும் குறைவாக இருந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்ட போதும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தினேஷ்குமார் உயிரிழந்தார் என தெரிவித்தார்.