உறவினர் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காகப் பிரயாக்ராஜ் வந்த ஒரு குடும்பத்தினர், ஓய்வெடுப்பதற்காக ‘Hotel O Courtyard Villa’-வில் அறை எடுத்துள்ளனர். மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருந்த தனது மாமியாரை அழைத்துக்கொண்டு ஓய்வெடுக்கச் சென்ற அந்தப் பெண்ணிற்கு, ஹோட்டல் வரவேற்பறையில் காத்திருந்தது ஒரு மிகப்பெரிய அவமானம்.
முறையான புக்கிங் செய்திருந்தும், தம்பதியினரின் ‘இனிஷியல்’ (Surname) வேறாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, “நீங்கள் கணவன்-மனைவி தானா?” என ஊழியர்கள் தரக்குறைவாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். மருத்துவ அவசரத்தில் இருந்த ஒரு குடும்பத்திடம் மனிதாபிமானமே இல்லாமல் நடந்துகொண்ட அந்த ஹோட்டல் ஊழியர்களின் செயல் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட வந்திருந்த வயதான பெண்மணியைத் தனது ‘மாமியார்’ என்று சொன்னதைக் கூட நம்ப மறுத்த ஊழியர்கள், அந்த இடத்தையே ஒரு விசாரணை வளையமாக மாற்றியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலாகி 10 லட்சம் பார்வைகளைக் கடந்த பின்னரே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளன.
“இனி ஹோட்டலுக்குப் போகும்போது கல்யாணப் பத்திரிகையையும் கையோடு கொண்டு போகணுமா?” என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருவதுடன், இந்திய ஹோட்டல் துறையில் நிலவும் இத்தகைய ‘மாரல் போலிசிங்’ கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தி வருகின்றனர்.
