தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, தவெக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பெண்களுக்கான மாத உரிமைத் தொகை ரூபாய் 2,500 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அதிமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பியது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்தவுடன் பெண்களுக்கு மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அவர்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார்.
​இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார், “பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2,500 எப்போது வழங்கப்படும்?” என அரசை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு தவெக அரசு சார்பில் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தற்போது ஆளுநர் உரை குறித்து மட்டுமே அவையில் விவாதிக்க வேண்டும், மற்ற கருத்துகளைப் பேசி விவாதத்தைத் திசை திருப்ப வேண்டாம்; இது குறித்து பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது விரிவாகப் பேசலாம்” என்று கூறி பதிலளித்தார். தவெக அரசின் முக்கிய வாக்குறுதி குறித்து சட்டமன்றத்தில் அதிமுகவும் அமைச்சரும் காரசாரமாக விவாதித்துக் கொண்ட இந்த தகவல் தற்பொழுது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.