இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவிலான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தபால் அலுவலகங்களில் மக்கள் பயன்பெறும் விதமாக ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய தபால் துறை நாட்டு மக்களுக்கு உத்திரவாதமான லாபத்தை வழங்கும் வகையில் பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மாதம் தோறும் வருமானத்தை பெற விரும்பும் நபர்களுக்காக மாதாந்திர வருமான திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்திற்கு ஐந்து வருடம் முதிர்வு காலமாகும். ஒரு தனிநபர் கணக்கில் ஒன்பது லட்சம் ரூபாய் வரையிலும் கூட்டு கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.4 சதவீதம் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த பிறகு மாத வருமானமாக 5,500 ரூபாய் பயனாளரின் அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு செலுத்தப்படும். இந்த திட்டத்தின் முடிவில் வட்டியாக 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பயனாளர்கள் பெறுவார்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்தை நீட்டிக்க விரும்பினால் அதற்கான விருப்பமும் வழங்கப்படுகின்றது. ஆனால் முதிர்வு காலத்திற்கு முன்பு கணக்கில் உள்ள தொகையை எடுக்க விரும்பும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
