நடிகர்-சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான விவகாரத்தில், ரங்கராஜின் சட்டப்பூர்வ மனைவி ஸ்ருதி பிரியா முதல் முறையாகக் களம் இறங்கியுள்ளார். “எனது கணவரிடம் இருந்து பணம் பறிப்பதும், எங்களைப் பிரிப்பதும்தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம்” என்று ஸ்ருதி பிரியா ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, மகளிர் ஆணையத்தில் ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டதாகவும், குழந்தையின் தகப்பன் தான் என்பதையும் ஏற்றுக்கொண்டதாகவும் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார். ஆனால், இதற்குப் பதிலளித்த ரங்கராஜ், ஜாயுடனான திருமணம் மிரட்டி நடத்தப்பட்டது என்று கூறி, DNA டெஸ்ட் மூலம் குழந்தை தன் குழந்தை என்று நிரூபிக்கப்பட்டால் காலம் முழுக்கப் பார்த்துக்கொள்ளத் தயார் என்றும் அறிக்கை வெளியிட்டார். பின்னர், ரங்கராஜ் சொல்வது உண்மை இல்லை என்று கூறி ஜாய் மூன்று வீடியோக்களை வெளியிட்டார்.

இத்தனை மாதங்கள் அமைதியாக இருந்த ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பிரியா, தற்போது அறிக்கையுடன் ஆதாரங்களையும் (ஜாயின் கையெழுத்துக் கடிதம், வாட்ஸ்அப் உரையாடல்) வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட ஆதாரங்களில், ஜாய் கிரிசில்டா ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் என்றும், உடனடியாக ₹10 லட்சம், மாதம் ₹8 லட்சம் வழங்க வேண்டும், மேலும் ஒரு வீடு வாங்கித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

“எனது கணவருடன் உறுதியாக நிற்பேன்; அவரை இறுதி வரை காப்பாற்றுவேன். எங்கள் குடும்ப அமைதியைக் குலைப்பதுதான் ஜாயின் நோக்கம்” என்றும் ஸ்ருதி பிரியா கூறியுள்ளார். பொருளாதார லாபத்துக்காக ஊடகங்களை ஜாய் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஸ்ருதி, தான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை என்று ஜாய் கூறினாலும், அவரது சொந்தக் கையெழுத்துக் கடிதமே அதற்கு நேர்மாறான உண்மையை வெளிப்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.