ஜம்மு காஷ்மீரில் கடந்த 14ஆம் தேதி ஏற்பட்ட மேக வெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு 61 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த கோர சம்பவத்தில் 116 பேர் காயமடைந்த நிலையில் மாயமான 70 பேரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சசோட்டி பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழந்தைகளை முன்கூட்டியே அழைத்துச் செல்ல ஆசிரியரான சந்த்தை அணுகியுள்ளனர்.
ஆனால் சந்த் சுதந்திர தின விழா ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால் மாணவர்களை அனுப்ப தாமதமானது. அப்போது திடீரென காலை 11.40 மணிக்கு பயங்கர சத்தத்துடன் நிலம் அதிர்ந்து மலையின் ஒரு பகுதி சரிந்து ரஜாய் நள்ளா ஓடையில் விழுந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சந்த் மாணவர்களை உயரமான இடத்திற்கு ஓட சொல்லி சில மாணவர்களை தன்னுடன் பத்திரமாக பிடித்துக் கொண்டார். பின்னர் பெருவெள்ளம் வடிந்த பிறகு அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக வெளியே வந்தனர்.
இதுகுறித்து ஆசிரியர் சந்த் கூறும் போது நாங்கள் இருந்த இடத்திலிருந்து சிறிய தூரத்திலேயே உடல்கள் மிதந்து செல்வதை பார்த்தேன். இந்த கோர சம்பவத்தில் எனது சகோதரரை இழந்தேன். எங்களது பள்ளிக்கூடம் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரின் தற்காலிக முகாமாக மாறி இருக்கிறது.
சமபந்தி விருந்து ஏற்பாட்டாளர்களுடன் மாணவர்களை அனுப்பி இருந்தால் 80 மாணவர்களை காப்பாற்றி இருக்க முடியாது என கூறினார். சரியான நேரத்தில் மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சந்த்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
