மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த முனேஷ் ரகுவன்ஷி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தை இம்ரத் சிங்கை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

வயது முதிர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவரது தந்தையால் நடக்க முடியவில்லை. மருத்துவமனைக்கு வந்தபோது அவருக்கு உதவ ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை என்பதுடன், நோயாளிக்கான ஸ்ட்ரெச்சர் வசதியும் செய்து தரப்படவில்லை.

இதனால் வேறு வழியின்றி முனேஷ் தனது தந்தையைத் தோளில் சுமந்தபடி மருத்துவமனை வளாகத்திற்குள் நீண்ட நேரம் சுற்றித் திரிந்தார்.
அவரது தந்தை இரண்டாவது மாடியில் உள்ள வார்டுக்குச் செல்ல வேண்டியிருந்த நிலையில், அங்கிருந்த மின்தூக்கியும் (லிப்ட்) பழுதடைந்து காணப்பட்டது.

இதனால் முனேஷ் பெரும் சிரமத்திற்கு இடையே தனது தந்தையை ஸ்ட்ரெச்சரில் வைத்து இழுத்தபடி இரண்டாவது மாடிக்குக் கொண்டு சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் இதனை வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் உதவிக்கு வரவில்லை.

அரசு மருத்துவமனையின் இந்த அவல நிலை மற்றும் ஊழியர்களின் அலட்சியம் குறித்து முனேஷ் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.