சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்குப் போட்டியாக அறிவிக்கப்பட்டிருந்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சிக்கல்களால் வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ‘பராசக்தி’ படத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா, ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டியது மக்களே தவிர, இணையதளத்தில் இயங்கும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், “படம் வெளியாகாத ஒரு நடிகரின் ரசிகர்கள், பராசக்தி படம் ஓட வேண்டுமானால் தங்களிடம் மன்னிப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று பதிவிடுகின்றனர்; இது போன்ற செயல்கள் ரவுடித்தனம் மற்றும் குண்டர்தனத்திற்குச் சமம்” என்று அவர் வெளிப்படையாகச் சாடியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1965-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான ‘பராசக்தி’ திரைப்படம், வசூல் ரீதியாகப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தணிக்கைக் குழுவின் 25 வெட்டுக்களுக்குப் பிறகு வெளியான இப்படம், முதல் நாளில் 27 கோடி ரூபாயும், இரண்டு நாட்களில் உலகளவில் 51 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த தொடக்கத்தைப் பெற்றுள்ள போதிலும், வார நாட்களான திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் படத்தின் வசூல் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கதைக்களத்தின் தீவிரத்தைப் பாராட்டுவோர் ஒருபுறம் இருந்தாலும், பொதுவான ரசிகர்கள் மத்தியில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இருப்பினும், பொங்கல் விடுமுறை நாட்கள் இன்று (ஜன. 14) முதல் தொடங்குவதால், வரும் நாட்களில் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
