உத்தரப்பிரதேச மாநிலம் ஜஹாங்கீராபாத் பகுதியில், தனது கணவர் மற்றும் அவரது உறவினரான ஊர் காவலர் மருமகன்  ஆகிய இருவரும் சேர்ந்து பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஊர் காவலர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த மார்ச் 19-ஆம் தேதி ஜஹாங்கீராபாத்தில் உள்ள மருத்துவரிடம் மருந்து வாங்குவதற்காக நான் சென்றேன். அப்போது எனது கணவர் லால் சிங் மற்றும் அவரது உறவினரான ஹோம் கார்டு ஷியோராஜ் சிங் ஆகியோர் என்னை காரில் ஏற்றினர். காரில் எனக்கு ஒரு குளிர்பானம் கொடுக்கப்பட்டது. அதைக் குடித்தவுடன் நான் மயக்கமடைந்தேன்.

மயக்க நிலையில் இருந்த என்னை  ஒரு விடுதிக்கு (Hotel) அழைத்துச் சென்ற இருவரும், அங்கு அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகத் தனது குடும்பத்தினருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லால் சிங் மற்றும் ஷியோராஜ் சிங் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும், இந்த விவகாரம் இதோடு முடிவடையவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்தப் பெண் கோசாலைக்குச் சென்றபோது, கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரை மீண்டும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்ததால் அந்த நபர் தப்பியோடினார். இது குறித்துப் புகார் அளிக்கச் சென்ற பெண்ணின் உறவினர்களை, குற்றம் சாட்டப்பட்டவரின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

தற்போது இந்த இரட்டைப் புகார்கள் குறித்து ஜஹாங்கீராபாத் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “பெண்ணின் புகாரின் அடிப்படையில் மருமகன்  மற்றும் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது” என்று கோட்வாலி ஆய்வாளர் குமார் சிங் தெரிவித்துள்ளார்.