பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல், அங்குள்ள சிறுவர்களுக்கு ஃபீல்டிங் பயிற்சி அளித்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத் கிங்ஸ்மென் அணிக்காக விளையாடி வரும் மேக்ஸ்வெல், வலைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் எல்லைக்கோட்டிற்கு அருகே நின்றிருந்த சிறுவர்களுக்கு (Ball Boys) கடினமான ‘பன்னி-ஹாப்’ (Bunny-hop) கேட்ச் முறையை விளக்கினார். தானே இருமுறை செய்து காட்டியதுடன், அச்சிறுவர்களையும் அவ்வாறே செய்ய ஊக்கப்படுத்தினார்.

ஒரு சிறுவன் அந்த கேட்சைப் பிடிக்க முயன்று கீழே விழுந்தபோது, அவனது முயற்சியைப் பாராட்டி மேக்ஸ்வெல் ‘பிஸ்ட் பம்ப்’ செய்து உற்சாகப்படுத்தியது மைதானத்தில் இருந்தோரை நெகிழச் செய்தது. கடந்த 2024-ஆம் ஆண்டு காலின் முன்ரோ இதுபோல ஒரு சிறுவனுக்குப் பயிற்சி அளித்த நிலையில், தற்போது மேக்ஸ்வெல்லின் செயல் பேசுபொருளாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகிய மேக்ஸ்வெல், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இரண்டாம் பாதியில் விளையாடுவதற்காக ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். மார்னஸ் லபுசேன் தலைமையிலான இந்த அணியில் இணைய மேக்ஸ்வெல்லிற்கு ரூ. 2.34 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பேட்டிங்கில் நிலவும் சுணக்கம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் காரணமாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் (CA) மத்திய ஒப்பந்தத்தை மேக்ஸ்வெல் அண்மையில் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிஎஸ்எல் தொடரில் அவர் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.