கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது, தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை காட்டிய பெண் உள்ளிட்ட 7 பேர் மீது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில் இந்து அமைப்பினர் சார்பில் அண்மையில் ஒரு பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் பெண்கள், ஆண்கள் எனத் திரளானோர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் அப்பகுதியில் உள்ள ‘அன்சரி தர்கா’ அருகே கடந்து சென்றபோது சர்ச்சைக்குரிய சம்பவம் நிகழ்ந்தது.
ஊர்வலத்தில் வாகனத்தின் மீது நின்றுகொண்டிருந்த ஹர்ஷிதா என்ற பெண், தர்காவை நோக்கி தனது கைகளால் அம்பு எய்வது போன்ற சைகையைச் செய்துள்ளார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பெரும் விவாதத்தையும் கிளப்பியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் பெலகாவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையிலும் இந்தச் செயல் அமைந்துள்ளதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஊர்வலத்தை முன்னின்று நடத்திய சுப்ரீத், ஸ்ரீகாந்த், பெட்டப்பா, கங்காராம், சிவாஜி, கல்லப்பா மற்றும் சைகை காட்டிய ஹர்ஷிதா ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
