நாட்டில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் அடிப்படையில் மத்திய அரசு வாகன அழிப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு பழமையான வாகனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்படுமா..? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு இருப்பதாவது, தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் சென்னை மாநகராட்சியில் 529 பேருந்துகளும், விழுப்புரத்தில் 270 பேருந்துகளும், கும்பகோணத்தில் 250 பேருந்துகளும், மதுரையில் 150 பேருந்துகளும் 15 வருடங்கள் பழமையானதாக இருக்கிறது.

இதேபோல் நெல்லை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையே 130, 120, 90 பேருந்துகள் என மொத்தமாக தமிழ்நாட்டில் 1650 பேருந்துகள் 15 வருடங்கள் பழமையானது என அடையாளம் காணப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதோடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 2500 பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக பொது போக்குவரத்து சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று போக்குவரத்து அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.