கடந்த 2019 -ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. ஏனென்றால் நிதி ஒதுக்கீடு என்பது பெரிதாக நடைபெறவில்லை. மொத்தம் 1,977.8 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 2026-க்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுச்சுவரை  தவிர வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை என தெரிகிறது. இந்த விஷயத்தில் மதுரையை சேர்ந்த மக்களவை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் அவ்வபோது குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடர்களும் தொடர்ந்து இதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் மதுரையின் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து அதற்கான பதில் கிடைத்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிகவும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது 12.35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமான பணியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அவை கவுகாத்தி, விஜய்பூர், ராஜ்கோட், அவந்திபோரா, பிபி நகர், மதுரை, தியோகர் ஆகியவையாகும். இதில் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு கால வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல்  தர்பங்கா போன்ற நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேற்குறிப்பிட்ட 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மதுரையில் மட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இப்படி இருக்கும் போது அடுத்த மூன்று வருடங்களில் முடித்து விடுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தேவையற்ற சர்ச்சையை சில அரசியல் கட்சிகள் கிளம்பி வருகிறது. ஆர்டிஐயில் கூறப்பட்டு இருப்பது செலவிட்ட தொகை. ஒதுக்கப்பட்டது 1,997.8 கோடி ரூபாய் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பானிய நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. அதனால் இதற்கான நிதி எப்போதுமே தயாராக இருக்கிறது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். மாநில உரிமைகள் என்னும் பெயரில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். கடந்த 9 வருடங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் மருத்துவ கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசு மீது மோசடி அரசியலை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.