தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000, சிலிண்டர் மானியம் ரூ. 100, மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ. 1500, கல்வித்துறை மீண்டும் மாநில பட்டியலுக்குள் கொண்டு வருதல் போன்ற அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதில் குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 என்பது தற்போது உறுதியாகி விட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் நகை கடன் தள்ளுபடியில் பல்வேறு விதமான அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது போன்ற மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதிலும் அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே பணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.