திருவனந்தபுரம் அருகே கடினம்குளத்தில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராக்கி (வயது 44) என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த மையம் கன்னியாஸ்திரிகள் நடத்தும் அமைப்பாகும். அந்த பெண் தன்னுடைய இறுதி ஆசையாக, தன் மறைவுக்குப் பிறகு இந்து முறைப்படி இறுதிச் சடங்கு நடைபெற வேண்டும் என குறிப்பாக தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது கோரிக்கையை மதித்து, கடினம்குளத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சஃபீர் என்ற நபர் முன்வந்து, இந்து மதத்தின் முறைகளுக்கேற்ப இறுதிச் சடங்கு செய்து பெரும் மனிதநேயம் எடுத்துக்காட்டியுள்ளார். “இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு, என் இஸ்லாம் மதம் ஒரு தடையாக இல்லை” என சஃபீர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

“>

அவரது மனிதாபிமான செயலை பாராட்டி, அந்த பகுதி மக்கள், கிராமத்தினர், மற்றும் உள்ளூர் ஜமாத் ஒன்றியம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.