பொதுமக்கள் தங்களின் சொத்துப் பதிவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சார் பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்லும்போது, நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதோடு அலட்சியமாக நடத்தப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் அதிரடியான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இனி வரும் காலங்களில் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பது இந்த உத்தரவின் மூலம் வெளிவந்துள்ளது.
இந்த புதிய உத்தரவின்படி, சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் மக்களை அதிகாரிகள் அமரவைத்துதான் பேச வேண்டும் என்று மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அமர்வதற்குத் தேவையான போதுமான நாற்காலிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அலுவலகங்களில் இருப்பதை மாவட்ட அதிகாரிகள் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும், இதில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
