பொதுவாக  தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். ஆனால் நடப்பாண்டில் இந்த மாதங்களில் கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  எனவே  காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்லுவதை தவிர்க்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.