வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (ஆக.25) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அங்கு அதிகபட்ச வெப்பநிலை சுமார் 36 டிகிரியும், குறைந்தபட்சம் 27-28 டிகிரியும் இருக்கும் எனவும் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்தியமேற்கு, தென்மேற்கு, மத்தியகிழக்கு, வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத் மற்றும் வடக்கு கொங்கன் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கையிடப்பட்டுள்ளது.
இதனால், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளிலும் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை மையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
