ஐதராபாத்தைச் சேர்ந்த 60 வயது பெண், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் பெயரை பயன்படுத்தி நடைபெற்ற மோசடியில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவில் புகழ் பெற்றதோடு, பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் பணியாற்றி வருகிறார். இந்த புகழை பயன்படுத்தி, கென்யாவைச் சேர்ந்த காபி தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக கிறிஸ் கெய்ல் செயல்படுவதாக கூறி, பெண்ணிடம் ரூ.2.8 கோடி முதலீடு செய்யச் செய்துள்ளனர். இந்த மோசடியில் அவரது சகோதரரும் உடந்தையாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த முதலீட்டு திட்டம் மூலம் மாதம் 4% லாபம் கிடைக்கும் என நம்பகத்தன்மை அளித்து, பெண்ணை முதலீடு செய்யத் தூண்டியுள்ளனர். தனது சகோதரரின் வார்த்தைகளையும், கிறிஸ் கெய்ல் தொடர்பான விளம்பர படங்களையும் நம்பிய பெண், ரூ.2.8 கோடி முதலீடு செய்ததோடு, தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் முதலீடு செய்யத் தூண்டியுள்ளார். இதனால் மொத்தமாக ரூ.5.7 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. முதலீடு செய்தவர்களுக்கு ஆரம்பத்தில் லாபமாக பணம் வழங்கப்பட்டதால், அவர்கள் சந்தேகம் கொள்ளாமல் தொடர்ந்துள்ளனர்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு, முதலீடு செய்தவர்களுக்கு எந்த பணமும் திரும்ப வராததால், அந்தப் பெண் தனது சகோதரரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். ஆனால், அவர் அமெரிக்காவில் அந்த நிறுவனம் இன்னும் செயல்பட்டு வருவதாக கூறி அவரை ஏமாற்றியுள்ளார். சந்தேகம் அதிகரித்த நிலையில், பெண் தொடர்ந்து கேள்வி கேட்டபோது, அவரது சகோதரரிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை. இதனால், ரூ.5.7 கோடி முதலீடு செய்தவர்களில், தற்போது ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் முதலீடு செய்த மற்றவர்களின் புகாரின் பேரில், போலீசார் 6 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்டு, மோசடியில் ஈடுபட்டிருப்பதாக வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. பலரும் கிறிஸ் கெய்லின் பெயரை பயன்படுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், போலீசார் இது தொடர்பாக மேலும் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.