மக்களுக்கு மலிவு விலையில் பருப்பு வகைகளை வழங்கும் விதமாக பாரத் தால் என்ற பெயரில் மானிய விலையில் கடலைப்பருப்பு ஒரு கிலோ பாக்கெட் ரூ. 60 ரூபாய்க்கு. 30 கிலோ மூட்டை கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய்க்கும் விற்பனைக்கு மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஸ் கோயல் அறிமுகப்படுத்தினார். சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக இந்த பருப்பு தற்போது டெல்லி தேசிய தலைநகர சாலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இது தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கேந்திரிய பந்தர் மற்றும் மதர் டெய்ரியின் சஃபர் ஆகிய சில்லறை  விற்பனை கடைகளிலும் கிடைக்கும். விலைவாசி  உயர்ந்து வரும் நிலையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள பருப்பு வகைகளின் கையிருப்பிலிருந்து நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சியில் இதுவும் ஒன்று. இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பருப்புகளில் கடலை பருப்பு மிக முக்கியமானது. இதை நாடு முழுவதும் பல வடிவங்களில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இனிப்பு மற்றும் கார வகைகளின் தயாரிப்புகளில் இது மிக முக்கியமான பொருளாக உபயோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.