மக்களவைத் தேர்தல் தொடர்பான கூட்டணி அறிவிப்பு விரைவில் அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை முதலில் வரவேற்றவன் நான் தான். விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது அவரது பாணி. கூட்டணி குறித்து விரைவில் நல்ல செய்தி வரும். கூட்டணி குறித்து பேசி வருகிறோம். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, நல்ல செய்தி வர சற்று காலமாகும். கூட்டணி குறித்து தான் மட்டும் தனியாக சொல்ல முடியாது, மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு தான் கூற முடியும். கட்சி அரசியலை தாண்டி நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.என தெரிவித்தார்.

முன்னதாக சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சித் தலைவர் கமலஹாசன் பேசியதாவது, 90 ஆயிரம் பேர் ஓட்டு போடாததால் நான் கோவையில் தோற்றேன். என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள், என்னை போக வைப்பது அதை விட கஷ்டம். நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல, சோகத்தில் அரசியலுக்கு வந்தவன். முழு நேர குடிமகனாக இல்லாமல் ஓட்டு கூட போடாதவர்கள் என்னை முழு நேர அரசியல்வாதியா என கேட்காதீர்கள். முழு நேர குடிமகன்கள் கூட யாரும் இல்லை, 40% பேர் வாக்களிப்பதில்லை.

அனைவரும் வாக்களிக்க வேண்டும். அரசியலில் விட்டு என்னைப் போக வைக்க முடியாது. எனது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. இனி அழுத்தமாக நடைபோடுவோம். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை, முழு நேர அப்பனும் இல்லை. பிள்ளையும் இல்லை. சொந்த காசில் கட்சி நடத்தி வருகிறேன். உங்கள் அன்புக்கு கைமாறு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

டெல்லியில் விவசாயிகள் போராடுவதை தடுக்க ஆணிப் படுக்கை போட்டு இருக்கிறார்கள். எதிரி படையை நடத்துவது போல் விவசாயிகளை நடத்துகிறது மத்திய அரசு. படையெடுத்து வரும் எதிரிகளுக்கு என்ன வரவேற்பு கொடுப்பார்களோ அது டெல்லியில் நடக்கிறது. விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்த 10% கூட மத்திய அரசு செய்யவில்லை. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என மத்தியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயில் 29 பைசா தான் நமக்கு திரும்பி வருகிறது. ஓட்டுக்கு காசு வாங்குவதை நிறுத்தினால் ஏழ்மை ஒழியும்” என தெரிவித்தார்.