நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 133 அறிவிப்புகளோடு தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதன்படி, மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்கு 3000 ரூபாயாக உயர்த்தப்படும், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றி ஊதிய உயர்வு வழங்கப்படும், மழைநீர் சேகரிப்பு திட்டம், தமிழக மீனவர் பாதுகாப்பு, நீட் தேர்வுக்கு பதில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் எரிவாயு வழங்கப்படும், மேகதாது அணை கட்டுவது, வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிப்பது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் சென்னையில் நடத்தப்படுவது மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இதில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.