உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த தனது மகளின் சடலத்துடன் தந்தை ஒருவர் கடந்த ஐந்து மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டில் உதய பானு பிஸ்வாஸ் என்பவர் தனது 34 வயது மகள் பிரியங்காவுடன் வசித்து வந்தார். கடந்த பல நாட்களாக பிரியங்காவை வெளியே காணவில்லை என்பதால், அவரது உறவினர் பிஸ்வஜித் போன் செய்துள்ளார். அப்போது உதய பானு பிஸ்வாஸ் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். “பிரியங்கா உடல்நிலை சரியில்லாமல் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று கூறி மழுப்பியுள்ளார்.
சந்தேகமடைந்த பிஸ்வஜித், உறவினர்களுடன் மீரட்டிற்கு வந்து உதய பானுவைச் சந்தித்து விசாரித்தார். பின்னர் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கிருந்த காட்சியைக் கண்டு அனைவரும் நிலைகுலையப் போயினர். வீட்டிற்குள் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தன. படுக்கையில் பிரியங்காவின் உடல் முழுவதுமாக அழுகி, வெறும் எலும்புக்கூடாக மட்டுமே கிடந்தது. இது குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து எலும்புக்கூட்டை மீட்டனர். விசாரணையில், பிரியங்கா ஐந்து மாதங்களுக்கு முன்பே உயிரிழந்தது தெரியவந்தது.
மகள் உயிரிழந்ததை வெளியில் சொன்னால் போலீஸார் கைது செய்வார்களோ என்ற பயத்தில் உதய பானு யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. உடல் அழுகி துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக, அவர் தினமும் உடல் மீதும் வீடு முழுவதும் ‘பெர்ஃப்யூம்’ (வாசனைத் திரவியம்) தெளித்து வந்துள்ளார். மேலும், எப்போதும் ஊதுபத்திகளை எரியவிட்டு மணத்தை மறைக்க முயன்றுள்ளார். போலீஸார் சோதனையிட்டதில், காலி பெர்ஃப்யூம் பாட்டில்கள் வீட்டிலிருந்து அதிகளவில் மீட்கப்பட்டன.
பிரியங்கா கணினி ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தந்தை உதய பானு அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காமல், ‘மந்திரவாதம்’ மூலம் குணப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு பிரியங்காவின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தாயின் மறைவுக்குப் பிறகு பிரியங்கா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இப்போது மகளும் உயிரிழந்ததால், தந்தை உதய பானுவின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
