உறவு முறைகளையும் சமூக மாண்புகளையும் சீர்குலைக்கும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் பிபிகஞ்ச் பகுதியில் 35 வயது பெண் ஒருவர், தனது 15 வயது உறவுமுறை மகனுடன் (கணவரின் அண்ணன் மகன்) மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்களுக்கு இடையே, 9-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுவனும், அவனது சித்தியும் திடீரென காணாமல் போயுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தொடக்கத்தில் குடும்ப கௌரவம் கருதி இந்த விவகாரத்தை ரகசியமாக வைத்திருந்த உறவினர்கள், பல இடங்களில் தேடியும் இருவர் குறித்தும் துப்பு கிடைக்காததால், இறுதியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக வெளியூரில் வசித்து வந்த நிலையில், சித்தி – மகன் என்ற உறவு முறையைப் பயன்படுத்தி இருவரும் நீண்ட நேரமாக செல்போனில் பேசி வந்துள்ளனர். இவர்களின் நெருக்கம் குறித்து குடும்பத்தினருக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பல நாட்களுக்குப் பிறகு, பக்கத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவரும் பிடிபட்டனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. காவல்துறையிடம் பிடிபட்ட பின்னரும், அந்தப் பெண் சிறுவனுடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட சிறுவன் மைனர் என்பதால், உரிய சட்ட விதிகளின்படி மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளார். மேலும் உறவு முறைகளைத் தாண்டி நடந்த இந்தச் சீர்கேடான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
