ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா சையத் அலி காமேனேயியை வீழ்த்துவோம் என அமெரிக்கா சூளுரைத்த நிலையில், அவரது மாளிகை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பதிலடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள ஈரான், இஸ்ரேலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் நெதன்யாகு அந்நாட்டு போர் விமானத்தின் மூலமாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், உலக நாடுகள் மிகுந்த கவலையுடன் இந்தச் சூழலை உற்றுநோக்கி வருகின்றன.
