அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய “யூதாவின் கேடயம்” வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் 86 வயதான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமேனியின் வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் துல்லியத் தாக்குதலில், அவரது மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோரும் உயிரிழந்ததாக ஈரானின் ஃபார்ஸ் நியூஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஈரானின் பாதுகாப்பு அமைச்சரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கமேனி உயிருடன் இருப்பதாகவும், பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஈரான் அதிகாரிகள் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்தத் தாக்குதல், இன்னும் ஒரு வார காலத்திற்குத் தடையின்றித் தொடரும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, துபாய், கத்தார் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலக அமைதிக்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்கா கூறினாலும், ஈரானின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அணுசக்தி மையங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதால், இது ஒரு முழு அளவிலான போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.