தமிழ் திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் கைதானதைத் தொடர்ந்து, தற்போது பிரபல நடிகை அஞ்சு கிருஷ்ணாவும் சென்னை காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ‘வெள்ளிமலை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்ற இவர், சென்னையில் தடையை மீறிப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இவருடன் துணை நடிகை நிவேதா உட்பட மொத்தம் ஒன்பது பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

​கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ‘மெத்தபெட்டமைன்’ (Methamphetamine) எனப்படும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய வீரியம் மிக்க போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரகசியமாக நடந்த ஒரு பார்ட்டியில் இவர்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியபோது, கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர். அடுத்தடுத்து திரையுலகைச் சேர்ந்த முன்னணி மற்றும் துணை நடிகர்கள் போதைப்பொருள் வழக்கில் சிக்கி வருவது சினிமா வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.