பிரபல இயக்குனர் சற்குணம் இயக்கத்தில், துஷாரா விஜயன், அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் நடித்துள்ள ‘எக்ஸாம்’ (Exam) என்ற வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் மே 15-ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் தொடர், போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் அதைத் தடுக்க முயலும்போது ஏற்படும் சவால்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இந்தக் கதையை உருவாக்கத் தூண்டுகோலாக இருந்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.தொடர் குறித்து பேசிய இயக்குனர் சற்குணம், போட்டித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைப்பவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் முகத்திரையையும் இதில் காட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.
குறிப்பாக, தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இதுபோன்ற தேர்வு முறைகேடுகள் அதிகம் நடப்பதாகவும், அதைத் திரையில் நேர்மையாகப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு திரில்லர் தொடராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
